Thursday, 17 November 2011

GURU NAMASHIVAYAR

                                                                      குகை நமசிவாயர்

திருவண்ணாமலை மீதிருந்து இறங்கும்போது வருவது குகை நமசிவாயர் கோயில். குகையிலேயே வாழ்ந்து, அங்கேயே சிவலிங்கமாக மாறியதால் இம்மகானுக்கு குகை நமசிவாயர் என்ற பெயர் ஏற்பட்டது. இவரது காலம் சரிவர தெரியவில்லை. இவர் ஸ்ரீ சைலத்திலிருந்து தெற்கே வந்த கன்னட தேச வீர சைவர். சிவத்தலங்களை தரிசிப்பதற்காக தனது குருவிடம் உத்தரவு பெற்று தமிழ்நாட்டில் யாத்திரை செய்தபோது அவர் திருவண்ணாமலை தலத்துக்கு வந்தார். அண்ணாமலையார் அவருக்கு குருவாகவே தரிசனம் அளித்து, தம்மைப்பற்றி தோத்திரப்பாடல்கள் இயற்றுமாறு கட்டளை இட்டார். ஈசனின் ஆணைக்கிணங்க மலை மீதிருந்த குகையிலேயே அவர் தங்கி விட்டார். அங்கு அவர் கடும் தவம் புரிந்து யோக சித்திகள் பெற்றார். காலம் சரியாக தெரியாவிடினும், குகை நமசிவாயர் அருணகிரிநாதருக்கு முன்பு வாழ்ந்தவர் என்பது மட்டும் தெரிகிறது.

தூங்கும் ஊஞ்சல் 

குகை நமசிவாயருக்கு நிறைய சீடர்கள் இருந்தனர். அவர்களில் தலையானவர் நமசிவாயமூர்த்தி. குருநாதரின் சொல்லுக்கு மறுபேச்சு அறியாத ஒழுக்க சீலர். குருவையே விஞ்சிய சீடர் என்று சொல்லும்படி ஆன்மீக சாதனையில் முன்னேறி இருந்தார்.

குகை நமசிவாயர் எப்போதும் குகைக்கு அருகில் உள்ள ஓர் ஆலமரத்தில் தொங்கும் ஊஞ்சலிட்டு யோகநித்திரை செய்வது வழக்கம். ஒருநாள் அவர் வழக்கம்போல் யோகநித்திரையில் இருந்தபோது அருகில் நின்றிருந்த சீடர் நமசிவாயமூர்த்தி திடீரென காரணமில்லாமல் வாய்விட்டு சிரித்தார்.

குரு கண்விழித்து `இந்த சிரிப்புக்கு என்ன காரணம்?` என வினவினார்.அதற்கு  சீடர் நமசிவாயமூர்த்தி,`குருதேவா! மன்னித்தருளவேண்டும். திருவாரூரில் தியாகராஜசுவாமி திருவீதி வலம் வருகிறார். அவருக்கு முன்பாக நாட்டியமாடிக்கொண்டு செல்லும் தேவதாசிகளில் ஒருவள் கால்வழுக்கி கீழே  விழுந்துவிட்டாள். அதைப்பார்த்து சுற்றிலும் இருந்தவர்கள் சிரித்தனர். நானும் அக்காட்சியைப்பார்த்து அடக்க முடியாமல் சிரித்து விட்டேன். எனது பிழை பொறுக்கவேண்டும்` என பணிவுடன் கூறினார்.

ஒகோ! உனக்கு தொலைவில் உள்ளதைக்காணும் தூர திருஷ்டி சக்தி வந்து விட்டதா? என மனதுக்குள் நினைத்துக்கொண்டார் குகை நமசிவாயர். எனினும் சீடரிடம் எதுவும் பேசாமல் இருந்துவிட்டார். மற்றொருநாள் குருவின் அருகில் நின்று கொண்டிருந்த சீடர், திடீரென்று தனது மேலாடையை கைகளால் அழுந்த தேய்த்து விட்டார்.

குரு காரணம் கேட்க, `குருநாதா! தில்லையில் நடராஜ பெருமானின் சந்நிதி அருகே உள்ள விளக்கு திரியை ஒரு எலி இழுத்து வந்து, திரை சீலைமீது போட திரை சீலை எரியத்தொடங்கிவிட்டது, தீ மேலும் பரவாமல் தடுக்கவே மேலாடையை தேய்த்து தீயை அணைத்தேன்` என நமசிவாய மூர்த்தி பதிலளித்தார்.

வாந்தியை ஏந்தினார் 

சீடனின் ஞான திருஷ்டியை கண்டு வியந்த குரு, அதுகுறித்து பெருமிதம் அடைந்தார். எனினும் சீடனை மேலும் சோதிக்க திருவுள்ளம் கொண்டார். ஒருநாள் குகை நமசிவாயர், சீடனை அழைத்து தனக்கு வாந்தி வருவதாகவும் அதை ஏந்துமாறும் கட்டளையிட்டார். சற்றும் தயங்காத சீடர், குரு எடுத்த வாந்தியை தன இரு கைகளில் ஏந்திக்கொண்டார். குரு அத்துடன் நில்லாமல், `நான் எடுத்த இந்த வாந்தியை மனிதன் கால் படாத இடத்தில் போட்டுவிடு` என உத்தரவிட்டார். குருவின் கட்டளையை ஏற்று, என்ன செய்வது, எங்கு போடுவது என யோசித்த நமசிவாயர் அதை அப்படியே தன வாயில் போட்டு விழுங்கி விட்டார்!

பின்னர் குரு, ` என்ன நான் சொன்னபடி அதை மனிதன் கால் படாத இடத்தில் போட்டு விட்டாயா?` என வினவினார். `ஆம் சுவாமி! அப்படியே செய்து விட்டேன்` என்றார் நமசிவாயர். குரு விடவில்லை. `எங்கே போட்டாய்? என்றார். `நான் அதை எனது வயற்றில் போட்டு விட்டேன். அங்கு ஒருவரின் காலடியும் படமுடியாதே என்றார் நமசிவாயர். அவரது குரு பக்தியைக்கண்டு மனமகிழ்ந்தார் குகை நமசிவாயர்.

ஞான நிலையிலும், மனப்பக்குவத்திலும் தன்னைவிட சீடன் உயர்ந்துவிட்டார் என்று ஐயமின்றி உணர்ந்துவிட்ட குகை நமசிவாயர், இறுதியாக ஒரு வெண்பாவில் இரண்டு அடிமட்டும் சொல்லி, அதை பூர்த்தி செய்து முடிக்குமாறு சீடனிடம் கூறினார். அந்த சோதனையிலும் குரு மனம் மகிழும்படி தேறினார் குரு நமசிவாயர். இதை அடுத்து குரு, சீடரை நோக்கி `அப்பா நீ குருவுக்கே குருவாகிவிட்ட சீடர். இனி அனைவரும் உன்னை குரு நமசிவாயர் என்றே அழைப்பார்கள்.` இரண்டு யானைகளை ஒரே மரத்தில் கட்டக்கூடாது. நாம் இருவரும் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது. நீ உடனே புறப்பட்டு சிதம்பரத்துக்கு செல். உன் தவ வலிமையால் நடராஜ பெருமான் ஆலயத்துக்கு பல திருப்பணிகள் நடைபெற்றாக வேண்டியிருக்கு `என ஆணையிட்டார்.

இதை கேட்டதும் குரு நமசிவாயர் துடித்துப்போனார். அவரது கண்கள் கலங்கி விட்டன. குருவை நோக்கி,` சுவாமி தங்களை பிரிந்து என்னால் தனியே வாழ முடியாது. தங்கள் தரிசனமும், திருவடிசேவையும் என் உயிர்மூச்சாக இருக்க, அவற்றைவிடுத்து நான் வேறு எந்த தலத்திற்கும் செல்ல விரும்பவில்லை` என பணிவாக பதிலளித்தார். நெஞ்சம் நெகிழிந்துபோன குரு, `நமசிவாயா, நீ சிதம்பரம் சென்று தில்லை நடராஜரை தரிசனம் செய். அங்கு அவர் நம்மைப்போல் தரிசனம் அளித்தால் அங்கேயே இரு. இல்லாவிடில் மீண்டும் என்னிடமே வந்துவிடு` என்றார். சிதம்பரம் சென்றாலும் குருவின் தரிசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்ததும் குரு நமசிவாயர் அவரை வணங்கி விடைபெற்று சிதம்பரத்தை நோக்கி கிழக்கு முகமாக பயணமானார்.

அன்னமளித்த அன்னை 

கால் நடையாக பயணம். சற்றுநேரத்தில் அந்தி இருள் சூழவே ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்தார் குரு நமசிவாயர். அவருக்கு பசி எடுக்க தொடங்கியது. நடுக்காட்டில் உணவுக்கு என்ன வழி? உண்ணாமலை அம்மனை நினத்துப்பாடினார்.


அவர் பாடிய நேரத்தில், அண்ணாமலையார் கோயிலில் தங்க தாம்பாளத்தில் அம்மனுக்கு சர்க்கரை பொங்கல்  நிவேதனம் செய்யப்பட்டது. அந்த சர்கரை பொங்கல் தாம்பாளத்தை ஆலய அர்ச்சகர் மறந்துபோய்  சன்னதியிலேயே வைத்து பூட்டிவிட்டு சென்றுவிட்டார். மகனின் குரல்கேட்டதும் உண்ணாமுலையம்மன் தாம்பாளத்துடன் சர்க்கரை பொங்கலை எடுத்துவந்து குரு நமசிவாயரிடம் தந்துவிட்டு மறைந்தாள். அவரும் அதை நாவினிக்க உண்டு பசியாறினார்.

மறுநாள் கோயிலில் ஏக அமளி. தங்க தாம்பாளம் திருட்டு போய் விட்டது என ஒரே ஆரவாரம்.  அப்போது ஓர் சிறுவனுக்கு அருள் வந்து நடந்ததை கூறவே, அனைவரும் குரு நமசிவாயர் தங்கி இருந்த இடத்துக்கு வந்து அவரை தரிசித்து மகிழ்ந்ததுடன், தங்க தட்டையும் எடுத்து வந்தனர்.

இவ்வாறே, சிதம்பரம் நோக்கி சென்ற வழியில் பசி வந்த போதெல்லாம் நமசிவாயர், உண்ணாமுலை தாயை போற்றி பாட, கருணையே வடிவான பராசக்தி தனயனின் பசியை தீர்த்து வைத்தாள்.  புவனகிரி வந்த போது நமசிவாயர் தூரத்தில் தெரிந்த சிதம்பரம் கோவில் கோபுரம் கண்டு ஆனந்த பரவசம் அடைந்தார்.  திருக்குளத்தில்  நீராடியபின் கனக சபாபதியை தரிசித்தார்.  அண்ணாமலையில் குரு அளித்த வாக்கின் படி நடராஜ பெருமான், குகை நமசிவாயரை போலவே அவருக்கு காட்சி கொடுத்தார்.  அக்காட்சியை கண்டு பேரின்பத்தில் மூழ்கிய குரு நமசிவாயர், தம்மை மறந்த நிலையில் ஒரு நாழிகையில் நூறு பாடல்களில் அம்பலவாணரை துதித்து போற்றினார்.

இறைவன் ஆணை 

இதற்கிடையே தில்லை மூவாயிரவரில் மூன்று குருமார்களின் கனவில் தோன்றி, திருவண்ணாமலையில் இருந்து ஒரு யோகி வந்திருக்கிறான்.  அவனால் நமக்கு நிறைய திருப்பணிகள் நடக்க வேண்டி இருக்கிறது.  அவன் தவம் செய்ய வடபுற திருப்பாற்கடல் குளத்தருகே ஒரு இடத்தை ஏற்பாடு செய்யுமாறு இறைவன் ஆணை இட்டார்.  அதன் படி குரு நமசிவாய மூர்த்தியை  அங்கு அழைத்து சென்ற தீக்ஷதர்கள் அவர் தவம் இயற்ற உரிய ஏற்பாடு செய்தனர்.  அங்கு அன்னை சிவகாமி அவருக்கு பசி தீர உணவளித்தாள்.  எந்நேரமும் சிவ யோக நிஷ்டையில் ஆழ்ந்திருந்த நமசிவாயாரின் தவத்தை கண்டு ஆனந்தமடைந்த பக்தர்கள் அவர் காலடியில் ஏராளமான பணம், நகைகளை கொண்டு வந்து கொட்டினர்.  

ஆட்கொல்லி

ஆழ்ந்த சமாதியில் இருந்த நமசிவாயர் கண் விழித்த போது தன காலடியில் எராளமான பணம், நகைகள் குவிந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  `பணம் ஒரு ஆட்கொல்லி. இது எனக்கு தேவை இல்லை.  நீங்களே வாரிக்கொண்டு செல்லுங்கள்` என கூறி, அங்கு வந்தவர்களுக்கு அள்ளி அள்ளி தந்து விட்டார்.  இதை பார்த்த கோவில் தீக்ஷதர்கள் `இப்படி திரவியங்களை வாரி கொடுக்கிறீர்களே! நீங்கள் மக்கள் அளிக்கும் பணத்தை பயன்படுத்தி இறைவனுக்கு திருப்பணிகள் செய்யலாமே!' என நமசிவாயரை தாழ்மையாக கேட்டு கொண்டனர்.  இதை ஏற்க அவர் மறுத்து விடவே குருக்கள் மார்கள் நடராஜ பெருமானிடமே முறையிட்டனர்.  உடனே எம்பெருமான் வயோதிகர் வடிவம் ஏற்று நமசிவாயர் முன் தோன்றி தனக்கு தினமும் அன்னம் அளிக்குமாறு யாசித்தார்.  முதலில் தயங்கிய மகான் பின்னர் அன்னமளிக்க ஒப்பு கொண்டார்.  மறுநாள் பல்லக்கை அனுப்பி வைத்து நமசிவாயரை கோவிலுக்குள் அழைத்தார் மகேசன்.  இறைவன் ஆணையை தட்ட இயலாமல் கோவிலுக்குள் தன இருப்பிடத்தை மாற்றினார் நமசிவாயர். நமசிவாயரிடம் மக்கள் பொன், பொருள்களை  கொண்டுவந்து கொட்டினர். அவற்றை கொண்டு திருக்கோயிலுக்கு ஏராளமான திருப்பணிகள் செய்த நமசிவாயர், நடராஜ பெருமானுக்கு சிலம்பும், கிண்கிணியும் செய்து அளித்தார். சிதம்பரநாதனுக்கு பல அறக்கட்டளைகளையும் ஏற்படுத்தினார். இறுதியில் திருப்பாற்கடல் திருக்குளம் அருகே உள்ள திருப்பெருந்துறையில் மகா சமாதி அடைந்தார்.

குகை நமசிவாயர் `அருணகிரி அந்தாதி` எனும் நூறு பாடல்களும் குரு நமசிவாயர் `அண்ணாமலை வெண்பா` என்ற நூறு வெண்பாக்களும் செய்தருளினார்.

சிதம்பரம் நடராஜப்பெருமான் கோயிலுக்கு வடபுறம் வேங்கான் தெருவில் குரு நமசிவாய மூர்த்தியின் சமாதி ஆலயமும் ஸ்ரீ மடமும் உள்ளன. இவை கால வெள்ளத்தில் சிதிலமடைந்து காணப்படுவது மனதை குமுற செய்கிறது.