Friday, 28 October 2011

SADGURU SRI SESHADRI SWAMIGAL


                                                                  ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் 

பித்தராக திரிந்த சித்தர் 

திருவாவூரில் பிறந்தால் முக்தி,காசியில் இறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி. அகங்காரத்தை அழித்துவிட்டால் நம்முள்ளே ஆன்ம ஒலி பிரகாசிக்கும் என்ற தத்துவத்திற்கு விளக்கமாக ஓங்கி நிற்கிறது அண்ணாமலை எனும் ஞான மலை. இப்புனித மண்ணில் நடமாடிய சித்தர்கள், ஞானிகள் தான் எத்தனை எத்தனை! சிலர் மோன தவத்தில் முழ்கியிருப்பர், சிலர் பித்தரைப்போல அலைந்து திரிவர். இவர்களின் நடவடிக்கைகள்தான் வேறு. அவர்தம் ஞான செல்வம் ஒன்றேதான். இப்படி பித்தரைப்போல திரிந்த ஆத்ம ஞானி தான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்.

காஞ்சி ஸ்ரீ காமாட்சியை ஆராதிப்பதர்காக சில உபாசனா முறைகளை தோற்றுவித்த ஸ்ரீ ஆதிசங்கரர், அவற்றை சரிவர நடத்தி வருவதற்காக நர்மதா நதிக்கரையிலிருந்து முப்பது தேவி உபாசகர்களை அவர்களது குடும்பத்தோடு காஞ்சிபுரத்தில் குடியமர்த்தினார். அவர்கள் ஸ்ரீ காமாட்சி தேவியை குல தெய்வமாகக்கொண்டு ஸ்ரீவித்யை எனும் உபாசனா மார்கத்தைப்பரப்பி வந்தனர். அவர்களுக்கு காமகோடி வம்சம் எனப்பெயர் ஏற்பட்டது. இந்த வம்சத்தில் வந்தவர்கள் வேத,சாஸ்திரங்களில் மிகச்சிறந்த பண்டிதர்கள்.

காலப்போக்கில் கலியின் கொடுமையால் இந்தப்பரம்பரை சிறிது சிறிதாக மறைந்து, மூன்று நான்கு குடும்பங்களே எஞ்சி நின்றன. இவர்கள் தங்கள் முன்னோர் வாழ்ந்து காட்டிய முறையில் மனம் தளராமல் பிடிப்புடன் வாழ்ந்தனர். இவர்களில் பலர் ஜோதிட சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்று விளங்கியதால் ஸ்ரீ வரதராஜர் கோயிலில் இவர்களுக்கு பஞ்சாங்கம் வாசிக்கும் உரிமையும் அதற்க்கான மானியமும் அளிக்கப்பட்டிருந்தன. 

இந்த மரபில் வந்த வரதராஜன்-மரகதம் தம்பதிக்கு, ஸ்ரீ காமாட்சியின் அருளால் 1890 ம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ம் நாள் சனிக்கிழமை ஹஸ்த நட்சத்திரம் கூடிய மங்கள நாளில் கண்ணன் போன்ற ஓர் ஆண் மகவு உதித்தது. குல தெய்வமான வேங்கடாச்சலப்பதிக்கு உரிய அவரது திருநாமமான சேஷாத்திரி என்ற பெயர் அக்குழந்தைக்கு சூட்டப்பட்டது 

பராசக்தி அளித்த ஞானப்பிள்ளை என்பதால் சிறு வயதிலேயே சேஷாத்திரி தெய்வ வழிபாடும் இறை பக்தியும் இயற்கையாகவே வந்து விட்டது. தாய் மரகதம் அக்குழந்தைக்கு நான்கு வயது நிரம்பும்முன்னரே கிருஷ்ணாஷ்டகம், ராமாஷ்டகம், மூகபஞ்சசதி, குருஸ்துதி போன்ற தோத்திரங்களை கற்றுக்கொடுத்தாள்

தங்கக்கை 

ஒரு நாள் தாயின் இடுப்பில் அமர்ந்து குழந்தை சேஷாத்திரி வரதராஜபெருமாள் ஆலயத்திற்கு சென்றாள் திருவிழா என்பதால் தெரு முழுக்க கடைகள் முளைத்திருந்தன. ஒரு வியாபாரி வெண்கலத்தால் ஆன தவழும் கிருஷ்ணர் பொம்மைகளை விற்றுக்கொண்டிருந்தான். அதைப்பார்த்த சேஷாத்திரி தனக்கு ஒரு கிருஷ்ணர் பொம்மை வேண்டும் என அடம் பிடித்தார்.அன்னை அதில் விருப்பமில்லாததால் தொடர்ந்து நடந்தாள். குழந்தையின் அழகில் மயங்கிய அந்த வியாபாரி அம்மா! குழந்தை கிருஷ்ணனைப்போல் இருக்கு.நீங்க காசு தர வேண்டாம். நானே ஒரு பொம்மை தருகிறேன். எடுத்துக்கொள்ளுங்கள் என்றான். உற்சாகமாக சேஷாத்திரி, தானே ஒரு பொம்மையை எடுத்துக்கொண்டார். 

அவர் கை பட்டதுதான் தாமதம். வியாபாரி கொண்டுவந்த அத்தனை பொம்மைகளும் விற்றுத்தீர்ந்தன! மறுநாள் கோயிலுக்கு சென்ற போது அந்த வியாபாரி, கண்களில் நீர் வழிய அந்த அன்னை காலில் விழுந்து கும்பிட்டபின் அம்மா, வழக்கமாக இங்கு நூறு பொம்மை கூட விற்காது. உங்க குழந்தை தொட்டதால் நேற்று ஆயிரம் பொம்மைகளும் விற்றுப்போச்சு என்று சொன்ன அவன் `இது தங்கக்கை, தங்கக்கை` என்று கூறியவாறு குழந்தையின் கைகளைப்பற்றி கண்களில் ஒற்றிக்கொண்டான். இது ஊர் முழுவதும் பரவி எல்லோரும் `தங்கக்கை சேஷாத்திரி` என்றே அழைக்க ஆரம்பித்தனர்.

ஏழாவது வயதில் சேஷாத்திரிக்கு உபநயனம் செய்து வைக்கப்பட்டது.வேத பாடசாலையில் சேர்ந்து வேத அத்யாயனம் செய்ததுடன் தர்க்கம், வியாகரணம் (இலக்கணம்) எல்லாம் பயின்றபின், தன பாட்டனாராகிய காமகோடி சாஸ்திரிகளிடம் மந்திர சாஸ்திரத்தையும் கற்றுணர்ந்தார். இந்த சூழ்நிலையில் சேஷாத்திரியின் தந்தை வரதராஜர் திடீரென காலமாகி விட்டார். 

சந்நியாச யோகம் 

கணவனை இழந்த மரகதம், மகனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினாள் கணவரின் சகோதரி வெங்கலக்ஷ்மியின்மகள் காகினியை, சேஷாத்திரிக்கு மணமுடிக்க விருப்பம்கொண்டு, இதுபற்றி தன மைத்துனரும்  சிறந்த ஜோதிடருமான ராமசாமியிடம் பேசினாள். ஆனால் ராமசாமி ஜோதிடர் சொன்ன தகவல் அவளை ஆற்றோன்னாத்துக்கத்தில் ஆழ்த்திவிட்டது. சேஷாத்திரியின் ஜாதகத்தில் சந்நியாச யோகம் இருக்கிறது. திருமண பந்தம் அவனுக்கு கிடையவே கிடையாது என்று ஒரு குண்டை தூக்கிப்போட்டார் ஜோதிடர். அதிலிருந்து வாழ்க்கையே வெறுத்துப்போன மரகதம், பிடிவாதமாக உபவாசம் இருந்து உடலை வருத்தினாள் இறுதியில் ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தை  உச்சரித்தவாறே, அவளது உயிர் பிரிந்தது. பெற்றவளையும் பறிகொடுத்த சேஷாத்திரி, எப்போதும் பூஜை அறையே கதியாக கிடந்தார். காலை சந்தியாவந்தனம் முடிந்து பூஜை அறைக்குள் புகுந்துவிட்டால் கதவை தாழிட்டுக்கொண்டு பகல் இரண்டு மணிக்குத்தான் வெளியே வருவார். தன சித்தப்பா ராமசாமியின் பராமரிப்பில் இருந்த அவர் வீட்டில் தங்காமல் கோயில், குளம் என சுற்றத்தொடங்கினார். சில  சமயம் நாட்கணக்கில் வீட்டுக்கு வரவே மாட்டார். அழுக்குத்துணி, எண்ணை காணாத தலைமுடி, தாடி வளர்ந்த முகம், நெற்றியில் பளீரென துலங்கும் குங்குமம் இதுவே பால சேஷாத்திரியின் வடிவம். அவர் முகத்தில் அலாதியான தேஜஸ் ஒளி விடத்தொடங்கியது. 

தெருவில் யாராவது பெண்கள் போனால் அவர்கள் காலில் விழுந்து வணங்குவார். சூரியனையே பார்த்துக்கொண்டு நிர்ப்பார். அடக்கடி நீராடுவார் வாயில் எதோ மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருப்பார். கேட்டால் கர்மம் தொலைய வேண்டாமா? அதற்காகப்பண்ணுகிறேன் என்பார். `காமோ கார்ஷீத் மன்யுர கார்ஷீத் -காமக்கரோதி நாஹம் கரோமி ` என்ற மந்திரத்தை ஒரு லட்சம் தடவை ஜபித்து விட்டதாக சொல்லுவார். 

மயான ஜபம் 

இதெல்லாம் போதாதென்று, இரவு நேரத்தில் தனியாக எங்கோ சென்று வந்தார் எங்கே செல்கிறார் என்றே புரியவில்லை. விடிந்ததும் தான் வீடு திரும்புவார். பத்து நாட்கள் கழித்து அதற்க்கு விடை கிடைத்தது. வெளியில் தொல்லை அதிகமாக இருந்ததால் இரவு முழுவதும் மயானத்தில் அமர்ந்து துர்கா சூக்தம் ஜபம் செய்கிறார் என்று தெரிந்தது.. சிறிய தந்தை இதுபற்றி ஆச்சேபித்தபோது `மயானம் ருத்திர பூமி அங்கு ஜபம் செய்தால் ஈஸ்வரன் சீக்கிரம் பலன் தருவார். வெளியில் ஆயிரம் தடவை ஜபித்துப்பெரும் பலனை மயானத்தில் ஒரே தரம் ஜபித்து பெற்று விடலாம் `என பதிலளித்தார் சேஷாத்திரி.

இந்த நிலையில் சேஷாத்திரி ஸ்ரீ பாலாஜி சுவாமிகள் என்பவரிடம் சந்நியாச தீட்சை பெற்றுக்கொண்டார். அவரது தீட்சா நாமம் என்னவென்றே தெரியவில்லை. இன்று வரை அவர் சேஷாத்திரி சுவாமிகள் என்றே அழைக்கப்படுகிறார். அதன் பின் வீட்டுக்கே செல்லாமல், ஜீவன் முக்தராக ஞானப்பித்தராக, தன்னை உணர்ந்து பிரும்மானந்தக்கடலில் நீந்தி திளைத்தவராய் சுற்றி அலைந்து கொண்டிருந்தார். 

மாயமாக மறைந்தார் 

அன்று சேஷாத்திரியின் தந்தையாருக்கு திதி. இதற்காக, அவரது சிறிய தந்தை எங்கெங்கோ தேடி தெருவில் எங்கோ திரிந்துகொண்டிருந்த சேஷாத்திரியை கண்டுபிடித்து, நான்கைந்து பேர் உதவியுடன் அவரை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு தூக்கி வந்தார். `நான் சந்நியாசி கர்மம் எல்லாம் தொலைத்தவன் எனக்கு திதி கொடுக்கும் கடமை கிடையாது` என சேஷாத்திரி கூறியது யார் காதிலும் விழவில்லை. அவர் ஓடி விடாமல் தடுக்க ஒரு அறைக்குள் அடைத்து வெளியே பூட்டிவிட்டனர். 

மதியம் சுமார் இரண்டு மணி இருக்கும். சிரார்த்தம் முடிந்து, வலம் வந்து மூதாதையர் ஆசியை பெற வேண்டும். அதற்காக சேஷாத்திரியை அழைத்துவர அவரது சிறியதந்தை, அறைக்கதவை திறந்தார். வைதீகர்களும் ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தனர். அறைக்குள் நுழைந்த சிறியதந்தை, சேஷாத்திரியை தேடினார். உள்ளே அவரைக்காணவில்லை! பூட்டிய அறையிலிருந்து யோகசித்தர் சேஷாத்திரி மாயமாக மறைந்து விட்டார். இச்செய்தி ஒரே நொடியில் ஊரெங்கும் பரவி விட்டது. அந்த அற்புத நிகழ்ச்சியை பற்றி அனைவரும் அலுக்காமல் பேசினர்.

அதன்பின் சேஷாத்திரி காஞ்சி வாசத்தை முடித்துக்கொண்டார். கால் நடையாகவே பல ஊர்கள் வழியாக, நினைத்தாலே முக்தி அளிக்கும் திருவண்ணாமலையை வந்தடைந்தார்.

அண்ணாமலையே கதி 

திருவண்ணாமலையை வந்தடைந்த சேஷாத்திரி சுவாமிகள் அதன்பின் அங்கிருந்து எங்கும் செல்லவில்லை. அங்கேயே பல இடங்களில் பித்தனைப்போல சுற்றிக்கொண்டிருந்தார். அழுக்கு வேட்டி.சவரம் செய்யப்படாத முகம். கிடைத்ததை சாப்பிடுவார். சாப்பிடாமலும் இருப்பார். யாராவது புதிய வேட்டி கட்டி விட்டால், அடுத்த ஒரு மணியில் அது கந்தயாகி விட்டிருக்கும். குளக்கரை, குப்பைமேடு, எதோ ஒரு வீட்டின் திண்ணை, இப்படி எங்கு வேண்டுமானாலும் படுப்பார். பெரும்பாலும் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கம்பத்து இளையனார் கோயிலில் தான் அமர்ந்து இருப்பார் இதுதவிர, அன்ன சத்திரம், சடைச்சி ஆச்சியம்மாள் வீடு, சாதுமடம், சின்ன குருக்கள் வீடு, ஓயாமடம் போன்ற இடங்களிலும் அடிக்கடி தென்படுவார் 1889 ம் ஆண்டு தனது 19 ம் வயதில் அண்ணாமலைக்கு வந்த சுவாமிகள் நாற்ப்பது ஆண்டு காலம் அந்த புனித மண்ணில் `பைத்தியம்` போல உலவிவிட்டு தன பூத உடலை நீத்தார். அவர் அண்ணாமலையில் நிகழ்த்திய அற்புதங்கள் பலப்பல தீராத வியாதிகளும் மகானின் பார்வை பட்டதுமே பறந்தோடின. வாய் பேச முடியாதவர்கள் பேசினர். எமன் வாயில் சிக்கியவர்களைக்கூட மகான் மீட்டு இருக்கிறார் 

ஸ்ரீ ரமணருடன் தொடர்பு 

ஸ்ரீ ரமண பகவான் பாலப்பருவத்தில் அண்ணாமலையார் ஆலயம் ஆயிரம் கால் மண்டபத்தில் பாதாள லிங்கம் அருகே ஆழ்ந்த சமாதியில் இருந்தபோது, சில விளையாட்டு சிறுவர்கள் அவர்மீது சிறு கற்களை வீசி தொந்தரவு கொடுத்தனர். அப்போது எங்கிருந்தோ ஓடி வந்த சேஷாத்திரி சுவாமிகள் சிறுவர்களை சத்தம் போட்டு விரட்டினார். அச்சமயம் அங்கு வந்த வெங்கடாசலம் என்பவர் சேஷாத்திரி சுவாமிகளை என்ன எது என்று விசாரித்த போது சுவாமிகள் `உள்ள போய் பாரு. சின்ன சாமி உட்கார்ந்து இருக்கு`.என்று கூறியவாறே ஓடிவிட்டார். வெங்கடாசலம் உள்ளே எட்டிப்பார்த்தபோது அரை இருட்டில் ஒரு உருவம் அமர்ந்திருப்பதைக்கண்டு அலறி நிறைய பேர்களை அழைத்து வந்த போதுதான் மோனத்தவத்தில் இருந்த பகவான் ரமணரை வெளிஉலகம் கண்டுகொண்டது. சேஷாத்திரி அம்பாளின் மறு வடிவம் என்றால், அவரால் `சின்ன சுவாமி` என அழைக்கப்பட்ட ஸ்ரீ ரமணர் முருகப்பெருமானே என்றும் கொள்ளலாம். ஸ்ரீ ரமணரின் பக்தர்கள் தன்னிடம் வந்தால் அவர்களுக்கு மகிழ்ச்சியோடு உபதேசங்கள் செய்வார் சுவாமி.

                                                                   பகவான் ரமண மகரிஷி 

இந்த இரு `ஞான மலைகளும்` நேருக்குநேர் பெசிக்கொண்டவை வாசுதேவ சாஸ்திரி என்ற பக்தர் பார்க்கும் பாக்கியத்தைப்பெற்றார். விருபாக்ஷி  குகையில் தங்கியிருந்தபோது ரமணரை ஒரு முறை சேஷாத்திரி சுவாமிகள் சந்திக்க வந்தார். ரமணரை சற்றுநேரம் உற்று நோக்கிய சுவாமிகள் அவரை சுட்டிக்காட்டி `இது என்ன நினைக்கிறது என்று தெரியவில்லையே` என்றார். ரமணர்தான் மௌனகுருவாயிற்றே! ஏதும் பேசாமல் இருந்தார். சேஷாத்திரி விடாமல் `அருணாச்சலேஸ்வரரை வணங்கினால் நற்கதி கிடைக்கும்` என்றார். ரமணர் தன மௌனத்தை கலைத்து `வணங்குகிறவன் யார்? வணங்கப்படுகிரவன் யார்?` என்று கேட்டார். சேஷாத்திரி பலமாக சிரித்துக்கொண்டே `அதுதானே சரியா புரியலே` என்றார். பிறகு ரமண பகவான் அத்வைத தத்வம் பற்றி ஒரு மணி நேரம் பேசினார். எல்லாவற்றையும் கேட்ட சேஷாத்திரி,`அது என்னமோ, இதெல்லாம் எனக்கு புரியவே இல்லை. எனக்கு பக்திதான் தெரியும். நான் சுவாமிக்கு நமஸ்காரம் பண்ட்றேன்` என்று சொல்லிவிட்டு அண்ணாமலை சிகரத்தை நோக்கி பதினைந்து முறை கீழே விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டு போய்விட்டார். 

திருப்புகழ் சுவாமிகள் 

அர்த்தநாரி என்ற இயற்பெயர் கொண்ட திருப்புகழ் சுவாமிகள் முருகன் அருள் நிரம்பப்பெற்றவர். அவர் தன வடநாட்டு யாத்திரையை முடித்துக்கொண்டு திருவண்ணாமலை வந்து ரமண மகரிஷிக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் அவரை நோக்கிய ரமணர் `மலையிலிருந்து கீழே இறங்கி போங்கள்` என உத்தரவிட்டார். தான் என்ன தவறு செய்தோம் என்று கலங்கிய திருப்புகழ் சுவாமிகள் குருவின் கட்டளைக்குப்பணிந்து மலையை விட்டு கீழே இறங்கினார். மலை அடிவாரத்தில் ஒரு குட்டையில் படுத்திருந்த எருமை மாட்டை கட்டி அணைத்துக்கொண்டு சேஷாத்திரியும் படுத்திருந்தார். திருப்புகழ் சுவாமியை கண்டதும் ஓடிபோய் அவரை கட்டி தழுவினார் சேஷாத்திரி. கீழே அமர்ந்து அவரை தன்மடிமீது இருத்திக்கொண்டார். திருப்புகழ் சுவாமிகளை தன சீடராக ஏற்று சிவ மானச பூஜா என்ற சுலோகத்தை உபதேசமாக வழங்கினார். பின்னர் `நீ திருப்புகழுக்காகவே பிறந்தவன். அந்த மகா மந்திரமே போதும். நீ வள்ளி மலையில் வாசம் செய்துகொண்டிரு` என அருளினார முருகனின் அம்சமான ரமண பகவான் திருப்புகழைப்பரப்புவதர்காக பிறந்த வள்ளிமலை சுவாமிகளை சேஷாத்திரி சுவாமிகளிடம் அனுப்பி வைத்தது எத்தகயப்பொருத்தம்!

                                                                    திருப்புகழ் சுவாமிகள் 

சூட்சும திருஷ்ட்டி 

சேஷாத்திரி சுவாமிகள் கண்ணிலிருந்து எதுவும் தப்ப முடியாது. நமக்கு புலப்படாத சூட்சும உருவங்கள்கூட அவருக்கு தெரியும். ஒரு முறை காஞ்சியில் சிறிய தந்தையோடு இருந்தபோது, சுவாமிகள் தன சிற்றப்பாவுக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தார். திடீரென பாதியில் எண்ணெய் தேய்ப்பதை நிறுத்திவிட்டு முற்றத்தில் நின்று திறந்த வெளியில் ஆகாயத்தை அண்ணார்ந்து பார்த்தார். பிறகு எதையோ கைதட்டி தாளம் போட்டு கேட்டார். சிறிய தந்தை வியப்பு மேலிட `என்ன பார்த்தாய்? எதற்கு தாளம் போட்டாய்?` என்று கேட்டார். சுவாமிகள் `ஆகாயத்தில் கந்தர்வர்கள் பாடியவாறே செல்கிறார்கள். அவர்களைத்தான் பார்த்தேன்` என்றார். பைத்தியம் முற்றிவிட்டது என்று நினைத்த சிறிய தந்தை `அப்படியா? என்ன ராகத்தில் பாடினார்கள்?` எனக்கேட்டார் கிண்டலாக. சுவாமிகள் சற்றும் தயங்காமல் `பிலஹரி ராகம்` என்றார். தீவிர தவம் காரணமாக ஆகாயத்தில் நடமாடும் யக்ஷ, கந்தர்வர்களை கூட பார்க்கும் சக்தியை பெற்று இருந்தார் சுவாமிகள் என்பதற்கு இது ஒரு உதாரணம். மற்றொன்றும் உண்டு. அண்ணாமலையில் சுவாமிகள் பித்தராக திரிந்துகொண்டிருந்த சமயம். ஒரு நாள் பகல் 11 மணி இருக்கும். சுவாமி திடீரென வான வெளியை நோக்கி `விட்டோபா போரானே! ஜோரா போரானே! ஆஹா! ஆஹா! எத்தனை ஜோதி!` என உரக்க கூவினார். அருகில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. ஒரு சிலர் என்ன சாமி சொன்றீங்க என்று கேட்டபோது சுவாமிகள் ஒரு திசையை சுட்டிக்காட்டி `அதோபார் விட்டோபா கணஜோரா போரான் பார்! நல்லா பார்!` என்று திரும்ப திரும்ப கூறினார். அனால் அவர்கள் பார்த்த போது சூரியன் தான் சுள் என்று முகத்தில் அடித்தது. எதோ சொல்கிறார் என மக்கள் கலைந்து சென்றனர். சற்று நேரத்தில் திருவண்ணாமலை அருகே உள்ள போளூரில் இருந்த ஸ்ரீ விட்டோபா சுவாமிகள் முக்தி அடைந்து விட்டார் என்ற தகவல் வந்து சேர்ந்தது. புண்ணிய ஆத்மாக்கள். இறந்தபின் பிரும்மலோகம் செல்லும் அர்ச்சிராதி மார்கத்தை கூட பார்க்கும் சக்தி சேஷாத்திரி சுவாமிக்கு இருந்தது என்பது இதிலிருந்து தெரிகிறது. 

சுவாமிகள் ஒல்லியான தேகத்துடன் இருந்தாலும் அவரது பலம் அசாத்தியமானது. ஒரே இடத்தில் பல மணி நேரம் எழும்பி எழும்பி குதித்துக்கொண்டிருப்பார். நாமெல்லாம் அப்படி செய்தால் கால் ஒடிந்து விடும் சிவப்பு எறும்புகள் கூட்டமாக செல்லும் இடத்தில் பல மணி நேரம் படுத்திருப்பார். ஒரு சமயம் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் நுழைந்து ஆசிட் கலந்த ஒரு மருந்தை பாட்டிலோடு குடித்துவிட்டார். கடும் விஷமாகிய அந்த மருந்த ஏதும் செய்யவில்லை!

பிறந்தவர் எவரும் இறக்கத்தானே வேண்டும்! எத்தகைய மகான் என்றாலும் இயற்கையின் இந்த நியதியை மீற இயலுமா? சேஷாத்திரி சுவாமிகளுக்கும் இறுதி நாள் நெருங்கியது. அவருக்கும் அது தெரியும். ஒரு நாள் காய்ச்சல் என்று படுத்தவர் பிறகு எழுந்திருக்கவே இல்லை. 1929 ம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ம் நாள் சேஷாத்திரி சுவாமிகள் தனது பூத உடலை நீத்தார். அவரது இறுதி சடங்கில் ரமண மகரிஷி கலந்து கொண்டது குறிப்பிட தக்கது. சேஷாத்திரி சுவாமிகளின் அதிஷ்டானம் ரமணாஷ்ரமத்தை ஒட்டியே அமைந்துள்ளது. இங்கு பக்தர்கள் தங்க அனைத்து வசதிகளும் உள்ளன. சுவாமிகளின் உடல் மறைந்தாலும் ஆன்மா இன்றும் உயிர்ப்புடன் இருந்துகொண்டுதான் உள்ளது! 

ஆதாரம்: `அபிநவ சுகபிரும்மம்` பிரும்மஸ்ரீ குழுமணி நாராயண சாஸ்திரிகள் எழுதிய `ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் சரித்திரம்`. இந்நூலாசிரியர் சுவாமிகள் வாழ்ந்தபோதே அவருடன் நெருங்கிப்பழகி, அவரது நடவடிக்கைகளை கவனிக்கும் பாக்கியம் பெற்றவர். ஸ்ரீ சுவாமிகள் விதேக முக்தி அடைந்தபோது சாஸ்திரியார் அருகில் இருந்தார்.